அணையா விளக்கு
நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய தருணங்கள் வந்து போகும்!அதில் ஒரு சில அழகான நிகழ்வுகள் நம்மை போட்டு தாக்கும்.அந்த வகையில் எனக்கு சமீபத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத ஓர் அற்புதம் இதோ! வேளை நிமித்தமாக என் அம்மாவின் நீண்ட கால தோழி வீட்டிற்கு போயிருந்தேன்.வழக்கமான உரையாடல் நடுவே, அவரின் மகள் கோபமாக வந்து, "மா..! பேப்பர் எடுத்து வச்சியா..இல்லையா? எல்லா இடத்துலயும் பார்த்துட்டேன்..எங்கேயும் காணும்.ஏன் மா இப்படி பண்ற" என்று பொங்கி எழுந்தாள். அவள் கோபத்தை குறைக்க "ஏதோ சாக்கு சொல்லிவிட்டு,இதோ வரேன்" என்று சமையலறைக்குள் புகுந்தார்.(என்னை உபசரிக்க தான் போனாங்க !) கோபமாக இருந்த அவர் மகளை அமைதிபடுத்தி,பொறுமையாக பேச்சுக் கொடுத்தேன், அவள் எட்டாவது படிக்கிறாள் என தெரிந்தது.தன் பக்க நியாயத்தை சுட்டிக்காட்டி,"தினம் வர பேப்பர கூட ஒழங்கா எடுத்து வைக்க தெரில அக்கா..என் அம்மாக்கு". ஒரு பேப்பருக்காக இவ்வளவு கோவமா? என நான் கேட்க, அவள் மௌனமாக என்னை பார்த்துவிட்டு, "அது வெறும் பேப்பர் இல்ல ,என் கனவு" என்றாள்.
புரியாமல் நான் முழிக்க, என்னிடம் அவள் தன் விளக்கத்தை கூற ஆர்வமானாள்."பேப்பர்ல என் தோனி போட்டோ வரும், அதுவும் இப்போ உலக கோப்பை நடக்குதுல, அதுனால அவர் பற்றின ஏராளமான செய்தி, போட்டோ எல்லாம் வரும். எல்லாத்தையும் சேகரித்து வைக்கிறேன். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.எந்த அளவு என சொல்ற அளவுக்கு வார்த்தையே இல்லை,எல்லாத்துக்கும் மேல" என்று கண்கள் மிளிர,என்னை அவள் அறைக்குள் இழுத்துச்சென்றாள். "வாங்க அக்கா, எல்லாத்தையும் பாருங்க" என்றாள்.
அவள் அறை முழுதும் உள்ள சுவர்களில்,கிரிக்கெட்வீரர் தோனி நிரம்பி வழிந்தார்.தான் சேகரித்து வைத்துள்ள அனைத்தையும் என்னிடம் பெருமையாக காட்டினாள். 'உயிரினும் மேலான விசிறி' என சொல்வார்களே,அது இது தானோ என்று நினைத்துக்கொண்டேன்."இவ்வளவு பைத்தியமா இவர் மேல,எப்படி இவ்ளோ..?" என இழுத்தேன்.எதையோ சாதித்து விட்டதாக நினைத்துக்கொண்டு,மகிழ்ச்சி பொங்க என் அருகே வந்து, "எப்போமே அவர் மேல எனக்கு தனி மரியாதை உண்டு, அதுவும் 2011 ஆம் ஆண்டின் உலக கோப்பை வென்றதுக்கு அப்புறம் தீவிர ரசிகையா மாறிவிட்டேன்".கடந்த ஆண்டு என் அப்பா இறந்ததுக்கு பின்,இந்த அன்பின் தாக்கம் எல்லாத்தையும் மீறி திடமா நிக்குது.என் அப்பா அச்சு அசலா இவர் மாதிரிதான்.
ரொம்ப அமைதி, அதிகமா பேசமாட்டார்.இராணுவத்துல இருந்தார்.எப்போமே அவருக்கு நாடு தான் முக்கியம்,என் கூட பேச நேரமே இருக்காது.ஆனா அவருக்கு கிடைக்குற நேரத்துல என்ன உயிருக்கு உயிரா நல்லா பார்த்துப்பார்.தோனி கூட, நாட்டுக்காக தன் சொந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காம இருக்காரு.அப்பா எங்கேயும் போல,இங்க தான் இருக்காரு, தோனி வடிவத்துல.அவரோட உன்னதமான பாதையை தான் நான் ஃபாலோ(பின்பற்றி)பண்றேன்.இதை வெளிய யார்கிட்டயாவது சொன்னா,என்னை பைத்தியம்னு நினைச்சுப்பாங்க. அம்மா மட்டும் என்னை ஆறுதல்படுத்தி,"வாழ்க்கையே இருண்டு போயிடுச்சுனு நினைச்சேன்,ஆனா இல்லை என் மகராணி நீ தான் என் அணையா விளக்கு" என சொன்னாங்க.என்னுடைய வழிகாட்டி தோனி தான் இருக்காரே,அவரை மாதிரியே எல்லோரும் போற்றும்படி சாதிப்பேன்.
இது எல்லாத்துக்கும் நடுவுல,எப்படியாவது என் தோனியை பார்க்கனும், பார்த்து நிறைய பேசனும்."அது தான் என் வாழ்க்கையின் மிக சந்தொஷமான,மறக்க முடியாத நாள், அந்த நாள் விரைவில் வர வேண்டிகிட்டு இருக்கேன்." என உணர்ச்சி பொங்க கூறி முடித்தாள்.என் கண்களை எட்டிபார்த்த சில துளிகளை துடைத்துக்கொண்டு,"கண்டிப்பா அவரை நீ சந்திப்ப,எனக்கு நம்பிக்கை இருக்குமா ! உன்ன நினைத்து அவர் பெருமை படுவார்" என சொல்லிக்கொண்டு கனத்த மனதுடன் அங்கிருந்து விடைப்பெற்றேன்.
என்றென்றும் அன்புடன்
- ஹனீன்
(கல்லூரி மாணவி)